Friday, February 6, 2009

நான் கடவுள் - விமர்சனம்..



சன்னியாசியாய் காசியில் இருந்து வந்து சமுதாயத்தில் தனித்துத் திரியும் ருத்ரன, கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டு சமுதாயத்தில் சிக்கித் தவிக்கும் கண் பார்வையற்ற அம்சவல்லி என முற்றிலும் இருவேறு பின்புலம் கொண்ட மனிதர்கள், சமூகத்தில் வாழ பிடித்தம் இன்றி, அவர்களுக்குள் நிகழும் இறுதிச் சம்பவங்களே படத்தின் கதைக்களம். இருவருக்கும் நேரிடும் இயல்பான ஒரே மாதிரி சம்பவங்கள், வாழ்வின் போக்கை தீர்மானிக்கின்ற இயல்பை அழகாக சொல்லி இருக்கின்றார் இயக்குனர் பாலா.

"வாழ கூடாதவர்களுக்கு நீ கொடுக்கும் தண்டனை - மரணம்"
"வாழ இயலாதவர்களுக்கு நீ கொடுக்கும் மரணம் - வரம்"
படத்தில் இரு தடவை வரும் இந்த இணை வசனம்(subtitle) படத்தின் திரைக்கதையை தீர்மானிக்கின்றது..

வடக்கே காசியில், கங்கைக் கரையில் அமர்ந்து, இறந்தவர்களுக்கு மோட்சத்தையும் மறுப்பிறப்பையும் தீர்மானிக்கும் அகோரியான ருத்ரனை, தனது மனைவியிடம் காட்ட ஊருக்கு கூட்டிச் செல்ல விரும்புகின்றார், ஜோசியத்தில் நம்பிக்கை கொண்டு 14 வருடங்களுக்கு முன், மகனை காசியில் விட்டு சென்ற தந்தை... "உறவுகள் என்று எதுவுமிலை உனக்கு.. எல்லா உறவுகளையும் அறுத்தெறிந்து விட்டு வா.. என்னை அடையும் நேரம் உனக்கு தெரியும்" என அகோரி குரு, ருத்ரனை தந்தையுடன் அனுப்பி வைக்கின்றார்..

தெற்கே தமிழகத்தில், நல்லக்குரல் வளம் கொண்ட கண் பார்வையற்ற அம்சவல்லியை கழைக்கூத்தாடிக் கூட்டத்தில் இருந்து இழுத்து வந்து, பாடி பிச்சை எடுக்க வைக்க நினைக்கும் தாண்டவன், அவரின் கூலியாளாய் முருகன், மற்றும் ஒரு திருநங்கை என உடல் ஊனமுற்றவர்களை வைத்து தொழில் நடத்தும் ஒரு கூட்டம். "இனிமே நீ அவங்கக்கூடத்தான் இருக்கனும், அவங்க சொல்றபடித்தான் கேட்கனும்" எனறு சொல்லி அம்சவல்லியை தாண்டவனிடம் அனுப்பி வைக்கின்றார் ஒரு போலீஸ் அதிகாரி..

ஒருபுறம், தமிழகம் வந்து சேரும் ருத்ரன் மனம் முழுதும் வன்மைக் கொண்டு தாய், தந்தை, தங்கை என சொந்த குடும்பத்துடன் ஒட்ட இயலாமல், மலைக்கோவிலில் வாழும் சாமியார்களுடன் சேர்ந்து சுற்ற, மறுபுறம் பிச்சைக் கூட்டத்தில் வந்துச் சேரும் அம்சவல்லி, தனது வளர்ப்பு குடும்பத்தை மறக்க இயலாமல், பிச்சைக் கூட்டத்தில் சேர்ந்து பாடிப்பிழைகின்றார்..

குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கும் தாயிடம் இருந்து ருத்ரனும், தவறான வழிகளில் ஈடுபட வேண்டும் என்று தொடர்ந்து நிர்பந்திக்கும் தாண்டவனிடம் இருந்து அம்சவல்லியும் பிரிந்து நல்வழி அடைவதுடன் படம் நிறைவடைகின்றது..

முதலில் படத்தின் நிறைகள்..

"வீட்டுக்கு வாடா, 10 மாசம் சுமந்துப் பெத்தேனே, அதுக்காகவாவது இரக்கம் காட்டக்கூடாதா" என்று ருத்ரனிடம் கேட்கின்றாள் ருத்ரனின் தாய். இதற்கு ருத்ரன்,

"ஐந்திரண்டு திங்களாய் அடங்கியிருந்த தூமே!!
கையிரண்டு, காலிரண்டு, கண்ணிரண்டு ஆனதே..
உடம்பாவது ஏதடி, உயிராவது ஏதடி,
உடம்பால் உயிரெடுத்த உண்மை ஞானி நானடி"

என்றுவிட்டு

"தூமே"ன்னா என்னான்னு தெரியும் இல்ல?? என்று தனது தாயிடமே கேட்பது மிக அதிர்ச்சியூட்டும் வசனம்.

இந்த நான்கு வரிகளில் ருத்ரன் அளிக்கும் பதில் அவனின் தனிமையை, தாயின் மீதான கோபத்தை அழுத்தமாய் எடுத்துக் காட்டிவிடுகின்றது. வசனகர்த்தா ஜெயமோகன் ஒரு பத்து பக்க வசனத்தை "தூமே" என்ற ஒற்றை வார்த்தையில் சுருக்கி இருப்பது மிகவும் அசாத்தியம்..இருப்பினும், இவ்வசனம் சென்சாரின் கத்திரிக்கு பலியாகாதது ஆச்சரியமே..

மேலும் படத்தின் பல இடங்களில் ஜெயமோகனின் வசனம் படத்திற்க்கு வலுச்சேர்க்கின்றது..

* "ஜாலியாய் பிச்சை எடுத்து, சந்தோசமாய் இருக்கோனும்.."
* "அம்பானி, செல்போன் விக்கிறவங்க.."
* "இவரும் நாலு உருப்படியை சேர்த்து, தொழிலதிபர் ஆகி ஒரு நடிகையை கல்யாணம் கட்டிக்கிடடும்.."
* "இந்த வேசத்தைப் போட்டுத்தான் ஆந்திராவில ஆட்சியையே பிடிச்சாங்க.."
* சிவாஜி எம்ஜிஆரிடம், "அண்ணா, இப்படி எவ்வளவே கருத்துக்களை சொன்னீங்க.. பாட்டை நல்லா கேட்டுட்டு, ஓட்டை மட்டும் தான போட்டான்.. ஒருத்தனும் திருந்தலையே"
* கான்ஸ்டபிள் ரஜினியிடம் (நுண்ணரசியல்) - "அது எல்லாம் சரி, நீங்க ஒத்த கால்ல நிக்காதீங்க.. ஸ்டேசனுக்கு ஆகாதில்ல"

அந்த வில்லனின் கூடாரமாய் காட்டப்படும் கோவில் அட்டகாசமான லொக்கேசன் - எங்கேத்தான் பிடித்தார்களோ அந்த இடத்தை? தமிழ நாட்டில் நிஜமாலுமே இப்படி ஒரு கோவில் இருக்கிறதா?

வடிவேலுவுடன் பல படங்களில் கேனத்தனமாய் நடித்தவரா இவர், என நம்ப முடியாதபடி முருகன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணமூர்த்தி.. இவருக்கும் உடன் நடித்திருக்கும் நிஜ திருநங்கையான கீர்த்தனாவுக்கும் நடிக்க நிறைய வாய்ப்புக்கள். இதற்கு முன் கேமராவிற்க்கு நின்றிராத குட்டிச் சிறார்களும், நிஜத்தில் உடல் ஊனமுற்றவர்களும் படத்தில் மிக இயல்பாக நடித்திருக்கின்றனர். தாண்டவன் பாணியில் சொல்வதென்றால், நடிப்பென்றால் என்னவென்றே தெரியாமல் 50/100 படங்கள் முடித்தவர்களை படுக்க வைத்து, அவர்களின் வாயில் இந்த குட்டிச் சிறார்களை தாராளமாய் "அடிக்க" சொல்லலாம். இத்தகைய விளி நிலை மனிதர்களை அழைத்து வந்து, 3 வருடங்கள் போராடி, அவர்களிடம் இருந்து சினிமாத்தனம் இல்லாத நடிப்பை வெளிக்கொணர்ந்த பாலாவிற்க்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள்..

இந்துக்களின் மலைக்கோவிலில் "ஆறு மலை, எந்த மலை, ஏழு மலை" என்றுப் பக்திப் பாடல் பாடும் ஒலிப்பெருக்கியில் "உபயம்: ரஹிம் டாக்கீஸ்" என்று காட்டுவது, நடைமுறையில் முரணாகத் தோன்றினாலும், தேசிய ஒருமைப்பாட்டின் directorial touch..

படத்தை தூக்கி நிறுத்த முயலும் ஒற்றை ஆளாய், இளையராஜா.. தன்னுடைய favourite ஆன்மிகம் சார்ந்த படம் என்பதால், மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓம் சிவா ஓம் பாடலும், பிச்சைப் பாத்திரமும் இளையராஜாவின் top 100-ல் கண்டிப்பாய் இடம் பிடிக்கக் கூடியவை.. அதுவும் ஓம் சிவா ஓம் பாடலில், ஆர்யாவிற்க்கு கிடைத்த தலைக்கீழ் ஆசனம் ஓப்பனிங் சீன், பிதாமகனுக்கு அடுத்தப்படியானது. புவியீர்ப்பு விசை விதிகளைத் தாண்டி 60அடியில், புடவைச் சுற்றிக்கொண்டு ஓப்பனிங் சீனில் அறிமுகமாகும் கதாநாயகர்களுக்கு பழக்கப்பட்ட தமிழ்நாட்டு ரசிகனுக்கு நிச்சயம் இதுவொரு புது அனுபவம். இதை முன்மொழிந்த பாலாவிற்க்கும், அதை ஏற்று ஓரே மாதத்தில் தலைக்கீழ் ஆசனம் கற்றுக்கொண்டு வழிமொழிந்த ஆர்யாவின் முயற்சிக்கும் ஒரு hats off.

இவ்வளவு இருப்பினும், படத்தில் மிகப்பெரிய குறைகளும் உண்டு..

முதலில் ருத்ரனின் பாத்திரப்படைப்பு.. அகோரிகளை ஒரு"cannibals " போன்று படத்தில் காட்டியிருப்பது மிகவும் வேதனைக்குரியது.. அகோரிகள் எவரையும் உணவிற்க்காக துன்புறுத்துகிறவர்கள் அல்ல.. அவர்களைப் பொறுத்தவரை, கோழி இறைச்சியும் ஒன்று தான், மனித இறைச்சியும் ஒன்று தான்.. இது சகிப்புத்தன்மையை மிகவும் வளர்ப்பதாகவும், விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையை பெற உதவும் வழி என்பதும் அவர்களின் நம்பிக்கை. "உலகில் எதையும் வெறுக்கக்கூடாது, சகிப்புத்தன்மை அற்று, மனதில் வெறுப்பும் கொண்டிருந்தால், நிம்மதியாய் தியானம் செய்து, கடவுளை நெருங்க இயலாது" என்பதால் விருப்பு வெறுப்பற்ற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்..

ஆனால், படத்தில் அகோரிகளை பற்றி சொல்லப்படும் முன்னுரை இதற்கு முரணாக இருக்கின்றது..

"ஆண்டவன் நமக்கு இந்த பிறவியை குடுத்து இருக்கலாம்.. ஆனால், மறுபிறவியை தடுத்து நிறுத்தற சக்தி அகோரிகளுக்கு இருக்கு.. மோட்சம் யாருக்கு கொடுக்கணும், யாருக்கு கொடுக்கக் கூடாதுங்கறது, இவங்களுக்கு நல்லாவே தெரியும்" எனும்பொழுது, அகோரிகளின் பாத்திர வடிவமைப்பு அடிப்பட்டு போகின்றது..

மேலும், தமிழகம் திரும்பும் ருத்ரன், அவனின் சகோதரனின் மாலையிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு கேட்கும், "அவனா செத்தானா, நீயே கொன்னுட்டியா?" என்னுமிடத்திலும், பெற்ற தாயையே "தூமே" என்று அசிங்கப்படுத்துவதிலும் அகோரியான ருத்ரனின் கதாபாத்திரம் வலுவிழந்து விடுகின்றது. ஆக ருத்ரன் என்பவன் ஒரு உண்மையான அகோரியா, அனாதையாக தனித்து வளர்ந்ததால் வெறும் வன்மம் கொண்டு திரியும் ஒரு சாதாரண மனிதரா, அல்லது வழக்கமான பாலாவின் பட நாயகர்களை போன்ற ஒரு அசாதாரண பாத்திரமா என்பதில் குழப்பமே மிஞ்சுகின்றது.

ருத்ரனின் தாய் தனது மகளிடம், "அவன் ஒரு சுயம்பு-மா, அவன் வீட்டுக்கு வரமாட்டான்" என்று சொல்லுமிடத்திலேயே, ருத்ரனுக்கு உறவுகள் அறுந்துவிடுகின்றது.. இதற்குப் பிறகும், 'உறவுகளை அறுத்துவிட்டு வா' எனும் குருவிடம் திரும்பாமல், ருத்ரன் மலைக்கோவிலிலே சுற்றும் காரணம் படத்தில் சொல்லப்படவேயில்லை. 'என்னை வந்துச் சேரும் நேரம் உனக்கு தெரியும்' என்றுக் குரு சொல்லியிருப்பினும், ருத்ரன் காசி திரும்பாததற்க்கு காரணம், வாழ கூடாதவர்களுக்கும், வாழ இயலாதவர்களுக்கும் மரணத்தை அளிக்கவா, அல்லது படம் முடியட்டும் என்ற காத்திருப்பா? எப்படி இருப்பினும், அகோரி குருவின் உத்தரவு அதுவல்ல என்பதால் இந்த கேள்வி பார்வையாளர்களின் மனதில் தொக்கி நிற்கின்றது.

இப்படத்தில் எனக்கு எழும் மற்றொரு கேள்வி, மிகவும் விகாரமான அருவெருப்பான தோற்றம் கொண்ட ஒருவன், தன்னுடைய பாலியல் தேவைக்கு முகம் சுளிக்காமல் அழகை நோக்காமல் உடன்படும் ஒரு பெண்ணைத் தேடுகின்றான். மேலும், அந்த விகாரமான தோற்றம் கொண்டவர், மிகவும் வசதியானவராகவும், அதுவரை எந்தப் பெண்ணையும் வண்புணர்ச்சி செய்யாத நல்லவராகவும் காட்டப்படுகின்றார். இவருக்கு அம்சவல்லியை மணமுடிக்க எண்ணுகின்றார், தாண்டவன். ஆனால், இயற்கையிலேயே கண் பார்வையை இழந்த அம்சவல்லிக்கு, 'அக' அழகின்றி, 'புற' அழகை காண இயலாது. வெள்ளை/கருப்பு, அழகு/அருவருப்பு என பிரித்தறிய இயலாத அம்சவள்ளி, அவரை மணமுடிக்க சம்மதிக்காததற்க்கும் சரியான காரணங்கள் சொல்லப்படவேயில்லை. தாண்டவனிடம் மிகவும் சித்திரவதைக்கு ஆட்பட்டு, பிச்சை எடுக்க நிர்பந்திக்கப்படும் அம்சவல்லி, தோற்றத்தில் மட்டும் அருவருப்பாக உள்ள ஒருவரை மணக்க சம்மதிப்பதில் என்னக் தவறு, என்னப் பிரச்சினை? தாண்டவன் அருவருப்பான தோற்றம் கொண்டவருடன் அம்சவல்லியை போகச் சொல்லி சித்ரவதை செய்தும், போக மறுக்கும் அம்சவல்லியின் பிடிவாதம், விவாதத்திற்க்குரியது.

அம்சவல்லியை விடவும் மிகவும் உடல் குறைபாடு உள்ளவர்களை படம் முழுதும் தன்னம்பிக்கையுடன் உலாவ விட்ட பாலா, கண் பார்வையற்ற அம்சவல்லி கதாபாத்திரத்தை மேலோட்டமாக அமைத்தது ஏன்? உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் விளி மனிதர்களின் ஒருமித்த கேள்விகளாக படத்தின் இறுதியில் அம்சவல்லி கேட்கும் கேள்விகள் நியாயமாக இருப்பினும், அம்சவல்லியின் மரணம் இதற்கு பதில் அளிப்பதாக இல்லை. இவர்களுக்கும் நமக்கும் உண்டான இடைவெளியை குறைப்பதற்கோ, அவர்களின் மீது நமக்கு பாலா ஏற்படுத்த விரும்பிய ஒரு கவன ஈர்ப்பையோ, அம்சவல்லியின் மரணம் ஏற்படுத்த தவறுகின்றன. அம்சவல்லியின் மரணத்தின் மூலம் பாலா சொல்ல விரும்பியது இதுதான் என்றால், இப்படத்தை விடவும் ஒரிரு பக்கங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் மதுபாலாவை பற்றி எழுதியுள்ள இக்கட்டுரை <http://jeyamohan.in/?p=1504> ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் அதிகம்..

3 வருட உழைப்பு, 15 கோடி செலவு, அதிக சிரத்தையுடன் இளையராஜா, ஆர்யாவின் தியாகம், விளி நிலை மனிதர்களை நடிக்க வைத்தது, அகோரிகள் அறிமுகம், பூஜா-வின் தைரியம் என்று இத்தனை இருந்தும்...

ஒரு நாவல் படிக்கும் பொழுது, பிடிக்கவில்லை என்றால், படிக்க முடியவில்லை என்றால், அடுத்தப் பத்திக்கு, பக்கதிற்க்கு தாவிடும் வசதி, சினிமாவில் இல்லை.. ரோட்டில், கோயில் வாசலில், நடைப்பாதையில் அன்றாடம் நாம் சந்திக்கும் விளி நிலை மனிதர்கள் தான் படத்தின் கதை மாந்தர்கள்.. அவர்களை, அவர்களின் ஊனத்தை முழுத்திரையில் பார்க்க நேரிடுகையில், நமக்கு ஒருவித discomfort வந்துவிடுகிறது. ஒரு திரைப்படத்தின் பொழுதுப்போக்கு பார்வையைத் தவிர்த்து, முழுதாய் ஊனமுற்றவர்களை, அவர்களின் அவலங்களை திரையில் சொல்லவந்த பாலாவுக்கு எனது பாராட்டுக்கள்.. எனினும், அவர்களின் ஊனம் படம் முழுதும் விரவிக் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றவிடாமல் செய்து விடுகிறது. ஆனால், படத்தில் இயக்குனர் நிர்ணயிக்க விரும்பியது இதைத்தான் என்பதால், நிச்சயம் பாலாவுக்கு இதில் வெற்றியே.

பாலா ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இருப்பினும், கதை நாயகன் வில்லனை காட்டடி அடிப்பது, விளி நிலை மனிதர்கள் இருபுறமும் அமர்ந்திருக்க camera-வை நடுவில் எடுத்துச் செல்வது, இறுதிக்காட்சிகளில் கண்டிப்பாய் ஒருவர் இறப்பது, பேசாத கதை நாயகன் எனும் பொழுது, அவரின் படத்திற்க்கு ஒரு Template வந்து விடுகிறது. பாலா தன்னுடைய முந்திய படங்களின் பாதிப்புக்களில் இருந்து சீக்கிரம் வெளியில் வருதல் நலம்.

இறுதியாக, நம்மூர் தென்னிந்திய படங்களில் இல்லாத சினிமாத்தனமா, குறைகளா, தமிழ் திரைப்படத்தில் நல்ல முயற்சிகளை பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருக்கலாம் என்பவர்களுக்கு, இத்தகைய விமர்சனங்கள் பாலா போன்ற மிகச்சிறந்த இயக்குனர்களை இன்னும் ஊக்கப்படுத்தவும், அவரிடம் இருந்து இன்னும் சிறந்த படைப்புகளை எதிர்ப்பார்க்கவும் தான். பாலா நிச்சயம் புரிந்துக் கொள்வார் எனறு நினைக்கின்றேன்...

3 comments:

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

HS said...

Submit your blog to the Tamil Top Blogs directory http://kelvi.net/topblogs/

Anonymous said...

fantastic publish, very informative. I'm wondering why
the opposite experts of this sector do not notice this.
You must proceed your writing. I am confident, you have a huge readers' base already!


Feel free to visit my weblog: best fiends hack

Post a Comment