Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, October 12, 2011

மனசு..

மனசு..

'காலில்லா தங்கச்சி,
அம்மாக்கு உடம்பு சரியில்ல,
காசுக் குடுங்கய்யா',
என்றவளிடம்,
காசு தரமாட்டேன்,
சாப்பிட வாங்கிக்கோ இங்கேயென,
மூன்று இட்லி வாங்கினேன்..
நன்றி சொல்லி அவள்,
எங்கோ ஓடி மறைந்தாள்...
'ரொம்ப பெரிய மனசு சார்'
என்று ஹோட்டலிலும் பாராட்ட,
ஆட்டோவில் ஏறும்போது தான்
என் பெண் கேட்டாள்..
"மூணுப் பேருக்கு எப்படிப்பா,
மூணு இட்லிப் பத்தும்"?

Wednesday, April 15, 2009

பெண், மனம், காதல் - மூன்றையும் ஏன் படைத்தீர்கள்?

தவம்

ஆளுயர தாடிகொண்ட
கடும் தவத்தினால்
கடவுள் தோன்ற,
சிந்தனை கொண்ட மனிதன்
ஒரு கேள்வியென்றான்..
இருமாப்புடன் கேளென்றார்,
உலகை படைத்த வானவர்..

'பெண், மனம், காதல்,
மூன்றையும் ஏன் படைத்தீர்?',
எனக்கேட்ட மனிதன்முன்
அதிர்ந்து தலைக்குனிந்து,
மெள்ள கடவுள் மறைந்தார்..

கேள்வியுடனான மனிதன்
மீண்டும் தவம்கொள்ள,
முப்பருவம் கடந்தப்பின்
தோன்றினார் கடவுள் ..

அதே கேள்விகளுடன்
கடவுளை நோக்கிய மனிதன்,
அர்த்தம் புரிந்து வீடு திரும்ப,
மனிதனின் தவத்தை தொடர்ந்தார்,
'அடர்ந்த தாடியுடன்' கடவுள்..

Sunday, March 15, 2009

நினைவுகளில் விகடன் - 1

விகடனின் நீண்ட நாள் வாசகன் என்ற முறையில், விகடனில் வெளிவந்த, என்னை பாதித்த படைப்புக்களை பகிரும் ஒரு முயற்சி..

பத்து ஆண்டுகளுக்கும் முன்னர், விகடனில் வெளிவந்த இக்கவிதையை(முத்திரை?), இன்றும் யாராவது நினைவில் வைத்திருக்கின்றீர்களா? ஒருப் பெண்ணின் வல்லிய பிரச்னையை 5 வரிகளில் உணர்த்தும் இக்கவிதை சுஜாதா பிரபலப்படுத்திய Haiku (கவிதையின் இறுதி வரியில் ஒரு மெல்லிய திடுக்!!) வகையறாவை ஒத்திருக்கும்.

குப்பைத் தொட்டியின்கீழ்
ரத்தம் தோய்ந்த
சானிடரி நாப்கினை
பார்க்கையில்
அடிவயிற்றை வலிக்கின்றது..
ஆண்மகனாகிய எனக்கும்..

(இதை எழுதிய கவிஞர் பெயர் நினைவில்லை. தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்).

Friday, March 13, 2009

கேள்வி



வீட்டு மார்கேட்ஜும்
கிரெடிட் கிரைஸஸும்
சேர்ந்திங்கு வந்ததால்
பொருளாதார வீழ்ச்சி..

எனக்குத்தான் இல்லையே,
வாங்கவொரு வீடும்
கிரெடிட் கொள்ள கார்டும்..

பிறகேன் வந்தது,
இக்குடிசையுனுள்
பொருளாதாரத்தின் தாழ்ச்சி??

அன்றும், இன்றும்..



மீசையுடன் அரும்பத்
தொடங்கியதும் காதல்..
மீசையுடன் நரைக்கத்
தொடங்குவதும் காதல்...

சாபம் கொண்ட நெருப்பினால்
மதுரை எரிந்ததும் காதல்..
கோபம் கொண்ட விழியினால்
நீயென்னை எரிப்பதும் காதல்...

பார்வதி பின் சென்று
தேவதாஸ் ஆனதும் காதல்..
யுவதிகள் பின் சென்று
அகதிகள் ஆவதும் காதல்..

'அடி'யவள் வந்ததும்
'குடி'யவன் விட்டதும் காதல்.
'புதுவை' சென்றதும்,
மதுவை கொள்வதும் காதல்..

பிரிந்த அக்கணங்களில்,
தாடியை வளர்த்ததும் காதல்..
சேர்ந்திருக்கும் இக்கணங்களில்
தாடி வளர்வதும் காதல்..

அன்று
காதல் போயின்
சாதல் சாதல்..

இன்று
சாதலே ஆயினும்
வேண்டாம் இக்காதல்..

Wednesday, March 4, 2009

ஆதலினால் காதல் செய்வீர் - 1



பிரிந்து செல்லும்முன்
உனக்கோர் விண்ணப்பம்..

நாளைய பொழுதில்
எங்கேனும் சந்திக்கையில்
கணவரென எவரையும்
முகாந்திரம் செய்யாதே..

இறுதிவரை எனதுலகில்
எனக்கே உரியவளாய்
உன்னை நிறுத்திக்கொள்ள..

என்ன செய்வது இவரை??



எப்பொழுது எங்கு போகிறார், எவரிடமும் சொல்வதில்லை,
எப்பொழுது வீடு திரும்புவார், எவருக்கும் தெரிவதில்லை..

ஒரு பொருளை எடுத்த இடத்தில் வைப்பதில்லை,
இருந்த இடத்தில் பொருள்கள் இருப்பதுமில்லை..

நாம் சொல்வதை அவர் கேட்பதுமில்லை.
அவர் சொல்வது நமக்கு புரிவதுமில்லை..

நமது உணவு அவருக்கு பிடிப்பதில்லை.
அவர் உண்பது நமக்கு உணவேயில்லை..

வேலை அசதியினால் நமக்கு தூக்கம்.
அசராமல் தூங்குவதே இவருக்கு விருப்பம்....

இருக்கும் பழைய பொருளை உடைப்பதும்
உடைப்பதற்க்கு புதிய பொருளை கேட்பதும்

3 வயதில் "அவரிடம்" சொல்வதற்கு ஒன்றுமில்லை...

இருப்பினும்
என்ன செய்வது இவரை??