Wednesday, October 12, 2011

மனசு..

மனசு..

'காலில்லா தங்கச்சி,
அம்மாக்கு உடம்பு சரியில்ல,
காசுக் குடுங்கய்யா',
என்றவளிடம்,
காசு தரமாட்டேன்,
சாப்பிட வாங்கிக்கோ இங்கேயென,
மூன்று இட்லி வாங்கினேன்..
நன்றி சொல்லி அவள்,
எங்கோ ஓடி மறைந்தாள்...
'ரொம்ப பெரிய மனசு சார்'
என்று ஹோட்டலிலும் பாராட்ட,
ஆட்டோவில் ஏறும்போது தான்
என் பெண் கேட்டாள்..
"மூணுப் பேருக்கு எப்படிப்பா,
மூணு இட்லிப் பத்தும்"?

Friday, September 25, 2009

கிராபிக்ஸ் தவறுகள், டைரக்டரு ஷங்கரு, இதுக் கரீக்டா - 2??

முந்தையப் பதிவின் தொடர்ச்சியாய் தமிழ் சினிமாவில் அடுத்த கிராபிக்ஸ் தவறு..

காதலன் படத்தின் 'என்னவளே' பாடலின் ஆரம்பத்தில் வரும் ஒரிஜினல் பிரபுதேவா இங்கே!!

(எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).



கிராபிக்ஸில் உருப்பெறும் அட்டை பிரபுதேவா இங்கே!!



இரண்டுக்கும் உள்ள ஒரு வித்தியாசம்??

முன்புப்போலவே இன்னும் இந்தக் கிராபிக்ஸ்ல என்ன தப்புன்னு கேட்கிறவங்களுக்கு, மூணு விஷயம்.

1. நிழற்படத்தோட தரம் சரியில்லத்தான் (நன்றி: Youtube)..
2. ஒரிஜினல் பிரபுதேவாவேட இடதுப்பக்கம் இருக்கற 'பெயர் முத்திரை/பட்டயம்' (Name/Identity Badge), டூப்ளிக்கேட் அட்டை பிரபுதேவாவில் மிஸ்ஸிங்...
3. இல்லாட்டி, வழக்கம் போல வட்டம் போட்டுக் காட்டிடறது...
4. Youtube பாடல் வீடியோ இங்கே..










இன்னும் தொடரும்...

Saturday, August 22, 2009

உண்மையைச் சொன்னா சண்முகம் கிறுக்கனாம்!!

கண்ட நாள் முதல் படத்தில பிரசன்னாவுக்கும் அவங்க அக்காவுக்கும் நடக்கற Dialogues இது..

பிரியதர்ஷினி: இல்லை, இதுக்குள்ள ரம்யா ஒரு 15 தடவை போன் பண்ணியிருப்பா.. அதுத்தான் கேட்டேன்..

பிரசன்னா : இப்போ என்ன சொல்ல வர்ற நீ?

பிரியதர்ஷினி: பின்ன என்னடா, நீ வருவே, அப்பாடா Saturday, Sunday ஆச்சே. எல்லோரும் குடும்பமா கோவிலுக்கு போகலாம்ன்னு நினைப்பேன்.. Phone வரும், உடனே கிளம்பிடுவே.. என்ன நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது..

பிரசன்னா : தெரிஞ்சுக்கறதுக்கு ஒண்ணும் இல்ல, அவ என்னோட Friend, அவ்வளவுத்தான்..

பிரியதர்ஷினி: நிஜமாவா?

பிரசன்னா : என்ன நமட்டுச் சிரிப்பு வேண்டிக் கிடக்கு? அப்பா, காலாக்காலத்துக்கு இவளுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணி வச்சிருக்கலாம் இல்ல?

பிரியதர்ஷினி: ஆமா, "உண்மையைச் சொன்னா சண்முகம் கிறுக்கனாம்"

இதுல கடைசியா பிரியதர்சினி நக்கலா சொல்ற ஒரு டயலாக்/பழமொழி ரொம்ப யோசிக்க வச்சிடுச்சி.. என்ன Meaning-ன்னு சுத்தமா புரியலை.. யாருக்காவது தெரியுமா?

(4.27-யில் இருந்து)

Wednesday, July 8, 2009

நாடோடிகள் - சில கேள்விகள்



1. எதையும் எதிர்பாராமல், ஒரு பழக்கத்திற்க்காக கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைக்கும் மூன்று நண்பர்களின் கதையே 'சுப்ரமணியப்புரம்'. எதையும் எதிர்பாராமல் ஒருக்காதலுக்காக கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு அதே வாழ்க்கையை தொலைக்கும் மூன்று நண்பர்களின் கதைத்தான் 'நாடோடிகள்'. யாருக்காக வாழ்க்கையை தொலைத்தார்களோ, அவர்களால் ஏமாற்றப்பட்டு, அவர்களையே பழி தீர்க்க முற்படும் அதே மூன்று நண்பர்கள்.. நாயகனை காதலித்து, சுற்றத்தாரால் நிர்பந்திக்கப்பட்டு நாயகனை ஏமாற்றும் நாயகின்னு சமுத்திரக்கனியும் சசியும், சுப்ரமணியப்புரத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் வெளியே வரலையா? படத்துல 'உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு'ன்னு நிறைய தடவை டயலாக் வெச்ச சமுத்திரக்கனி ரொம்ப நேர்மையா இது சுப்ரமணியப்புரம் பாகம்-2 ன்னு ஒத்துக்குவாரா?

2. சசியின் மேல் அவ்வளவு ஆசையாசையாயிருக்கும், சசியின் மாமன் மகளுக்கு வேறொருவருடன் திருமணம் எனும் பொழுதே நமக்கு தெளிவாக புரிந்துவிடுகிறது, இது அவருக்கு கட்டாயத் திருமணம் அப்படீங்கறது.. முதற் பாதியில், சசியோட நண்பர் வேற 'அப்பன் செத்துடுவேன்னு மிரட்டினானா, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பே' அப்படின்னு ஒரு வசனம் வேற இருக்கு. இவ்வளவு இருந்தும், பிற்பாதியில் மாமன் மச்சான் சண்டை, அவங்கப்பா தூக்கு நாடகம், மாமன் மகள் அழுகை-ன்னு ஏகப்பட்ட இழுவையோட சொன்னது தாய்குலங்களின் அனுதாபத்திற்கோ?

3. கல்யாணம் செஞ்சுக்கிட்டு பஸ்-ல ஏறும் காதலர்களுக்கு போட்டிருக்கிற தங்கச் சங்கிலி, மோதிரம், அப்புறம் மேல, கீழ, சைடுல, அடியில-ன்னு எல்லா பாக்கெட்டுல இருந்தும் எல்லாத்தையும் எடுத்து தர சசியோட பாசம் புல்லரிக்க வைக்குது. ஒருக்கட்டத்துல, எஸ்.வி.சேகர் சொல்றாப்பல, நம்ம சசி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு போட்டிருக்கிற பனியன் ஜட்டி எல்லாத்தையும் கழட்டி பஸ்-க்குள்ள வீசிடுவாரோன்னு பயமாகிடுச்சு..ஒரு எம்.பியோட பையன்கிட்டயும் தொழிலதிபரோட பொண்ணுக்கிட்டயும் இல்லாத பணமா, இல்ல நகையா? சசி காதலருக்கு ரொம்பவே உதவுராருன்னு சொல்ல இந்த காமெடி சீன் தேவைத்தானா?



4. ஜெயம் படத்தில் சதா ஆரம்பித்து வைத்த டிரெண்ட் இது - வர வர 10-க்கு 7 படங்களில், ஹீரோயினுக்கு ஒரு பாவாடைத் தாவணி, இல்லை புடவையே காஸ்ட்யூம். இப்படத்தில் வரும் சசியின் மாமன் மகளும் 70களின் சரோஜாதேவியைப் போல படம் முழுக்க பாவாடை தாவணியிலேயே வருகிறார். சமீபத்தில், 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' அப்படின்னு ஒரு படத்த பார்த்ததும் தமிழ் சினிமாவை நினைச்சு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. ஒரு மொக்க ஹீரோ + பாவாடை தாவணியில் ஒரு மொக்க ஹீரோயின்னு படம் எடுத்தா எப்படியும் ஓடிடும் ஒரு நம்பிக்கையோ?

5. படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை வசனங்கள் (பொண்ணை நான் பார்க்கணும், எல்லா தெரியும் வெண்ணைங்களா தூங்குங்க), மாமன் மகளின் சின்ன குறும்புத்தனங்கள் (கடலையை வாயில் போட்டுக்கொண்டு மெல்லிய கண்ணடித்தல் - சூப்பர்), ஒரு சில மெல்லிய அதிர்வுகள் (அவங்களுக்கு இந்த இடம் போதும் - இடம்: மாநகராட்சி கழிவறை) என இருந்தும் இரண்டாம் பாதியில் படம் பயங்கர இழுவை. வாழ்க்கையை இழந்த நண்பர்களின் வலியை, இழப்பை இன்னும் கொஞ்சம் நாசூக்காய், சுருக்காய் சொல்லியிருக்கலாமோ?

6. "காதலர்களை சேர்த்து வையுங்கள், ஆனால் அவர்களுக்குள் உண்மையான காதல் இருக்கின்றதா எனப் பார்த்துவிட்டு சேர்த்து வையுங்க" அப்படீங்கறதுதான் படத்தோட மெசேஜ். ஆனால் கடைசிக்காட்சியில் யாரோ ஒருத்தர், காதலர்களை சேர்த்து வைக்க ஆளுங்களை தேத்த, முன்ன பின்ன தெரியாத அந்தக் காதலர்களுக்காக, சசியும் அவரோட தோஸ்த்துக்களும் 'நாங்களும் வரோம்' அப்படீன்னு கிளம்பறது, சமுத்திரக்கனி ஸார், என்னத்தான் சொல்ல வர்றீங்க இந்தப்படத்தில?

Wednesday, April 15, 2009

பெண், மனம், காதல் - மூன்றையும் ஏன் படைத்தீர்கள்?

தவம்

ஆளுயர தாடிகொண்ட
கடும் தவத்தினால்
கடவுள் தோன்ற,
சிந்தனை கொண்ட மனிதன்
ஒரு கேள்வியென்றான்..
இருமாப்புடன் கேளென்றார்,
உலகை படைத்த வானவர்..

'பெண், மனம், காதல்,
மூன்றையும் ஏன் படைத்தீர்?',
எனக்கேட்ட மனிதன்முன்
அதிர்ந்து தலைக்குனிந்து,
மெள்ள கடவுள் மறைந்தார்..

கேள்வியுடனான மனிதன்
மீண்டும் தவம்கொள்ள,
முப்பருவம் கடந்தப்பின்
தோன்றினார் கடவுள் ..

அதே கேள்விகளுடன்
கடவுளை நோக்கிய மனிதன்,
அர்த்தம் புரிந்து வீடு திரும்ப,
மனிதனின் தவத்தை தொடர்ந்தார்,
'அடர்ந்த தாடியுடன்' கடவுள்..

Friday, March 27, 2009

கமல் அண்ணாத்தே, சொந்தப் படம் எடுக்கற நீங்க, சொந்தமா எப்போ படம் எடுப்பீங்க??

பொதுவாகவே இன்ஸ்பிரேஸனுக்கும்(Inspiration) அப்பட்டமான காப்பிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஒரு நளாயினியை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட 'ரோஜா'வும், மகாபாரதத்தில் கர்ணன்னுக்கும் துரியோதனனுக்கும் இருந்த நட்பை சொன்ன 'தளபதி'யும் முதல் வகை. 'பொம்மரில்லு'விலிருந்து அடிக்கப்பட்ட ராஜாவின் 'சந்தோஷ சுப்பிரமணியம்' இரண்டாம் வகை என்றாலும் இவை மொழிமாற்று 'ரீமேக்' என்ற பெயரில் நிதர்சனமாய் ஒரிஜினலிருந்து உருவப்படுகின்றன் (உ.தா. தமிழிருந்து இந்திக்கு சென்ற கஜினி).

விரல் விட்டு எண்ணக்கூடிய சில படங்களே ஒரிஜினலை இன்ஸ்பிரேஷனாக கொண்டு, வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்படுகின்றது. இருப்பினும் இவ்வகையான் ரீமேக்குகளின் மூலம் தமிழுக்கு சில தரமான படங்களும் (ஒரு பொம்முக்குட்டி அம்மாவுக்கு, காதலுக்கு மரியாதை) கிடைக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. அடுத்து ஆங்கில படங்களில் இருந்து அப்பட்டமாய் உருவப்பட்டு, நம்மூரின் திறமையான டைரக்டர்களின் கைவரிசையில் வெற்றிக்கரமாய் மாற்றம் செய்யப்பட்டு வெள்ளிவிழா கண்ட படங்களும் ஏராளம்(ஆங்கில Mementoவில் இருந்து அட்டகாசமாய் மாறி இந்தியாவையே கலக்கிய கஜினி)..

எனக்கு தெரிந்து தமிழில் ஆங்கிலப் படங்களை கரு மாற்றம் செய்து(சிலதை வெளிப்படையாய் சொல்லிவிட்டு - மற்றது கப்சிப்) அதிக அளவில் வெற்றிக் கண்டது கமலின் திரைப்படங்களே. ஏறக்குறைய கமலின் வெற்றிப் படங்கள் அனைத்திற்கும் ஒரு ஆங்கில ஒரிஜினல் இருப்பது, கமலின் பரம விசிறியான எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமே..

என்னப் பண்றது, கமல் ரொம்ப சிந்திச்சு கஷ்டப்பட்டு எடுத்த அவருடைய சிறந்த படமான HEY RAAM-ஏ ரொம்ப சீக்கிரம் பெட்டிக்குள்ள தள்ளிட்டோம். நம்ம மக்கள் ரசனைக்கு எதுக்கு ரொம்ப மெனக்கெடனும் கமல் நினைக்கிறார் போல.. இனி கமலின் தமிழும் ஆங்கில ஒரிஜினல்களும்.

பி.கு: சொந்தச் சரக்கோ பாரின் சரக்கோ, தமிழ் சினிமாவிற்கு ஆக்ஸிஜன் ஊட்டும் எந்தச் சரக்கையும் சந்தோஷமாக அடிக்க நான் தயார்..

Patch Adams - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்





Very Bad Things - பஞ்சதந்திரம்




What About Bob - தெனாலி




Planes, Trains and Automobiles - அன்பே சிவம்




The Reincarnation of Peter Proud - எனக்குள் ஒருவன்




Moon over parador - இந்திரன் சந்திரன்




Green Card - நள தமயந்தி




Nine to Five - மகளிர் மட்டும்




Mrs. Doubtfire - அவ்வை சண்முகி




She-Devil - சதி லீலாவதி





Tie Me Up, Tie Me Down - குணா





To Sir, With Love - நம்மவர்


Tuesday, March 24, 2009

நினைவுகளில் விகடன் - 2

அப்போ எல்லாம் வாரந்தோறும் வியாழக்கிழமையே விகடன் கடைகளில் கிடைக்கும். பண்டிகை நாட்கள், சிறப்பு மலர் அல்லது சில வாரங்களில் மட்டும், புதன் மாலையே கடைக்கு வந்துடும். இப்போது விளம்பரங்களில் காட்டப்படுவதுப் போல, அப்போது நிஜமாகவே எனக்கும், என் அண்ணாவிற்க்கும், 'யார் முதலில் விகடன் படிப்பது'-ன்னு ஒரு போட்டியே நடக்கும். புதன் மாலை பள்ளியில் இருந்து திரும்பியதும், விகடன் வந்துவிட்டதா என்று அருகிலிருக்கும் பெட்டிக்கடைக்கு ஒரு மூன்று முறையாவது போயிட்டு வருவோம். முதலில் வாங்கி படித்து விட்டால் ஒரு சொல்ல முடியாத பெருமிதமும், அண்ணா முதலில் வாங்கிவிட்டால் ஏதோ தோற்றுவிட்டது போலவும் ஒரு எண்ணம்.

அதுவும் 90களின் காலக்கட்டத்தில் விகடனில் பல புதுமைகள் வந்துக் கொண்டிருந்த நேரம். 25 லட்ச ரூபாய் பரிசுப்போட்டி (அது பத்தி தனி பதிவு), முத்திரைக் கதைகள், சிறப்புக் கவிதைகள்-ன்னு பல போட்டிங்க வைச்சு கலக்கிட்டு இருந்தாங்க. அதனால முதல்ல யாரு விகடன் படிச்சு விடையை கண்டுப் பிடிக்கறாங்க-ன்னு எங்களுக்குள்ள பயங்கரப் போட்டி. அந்தப் பிரீயட்ல விகடன் ஆரம்பிச்சு வெச்ச விளையாட்டுத்தான் கடைசிப் பக்க 3D படங்கள்..

ஒவ்வொரு வாரமும், யாரு முதல்ல விகடனை வாங்கி, வந்திருக்கிற 3D படம் என்னன்னு கண்டுபிடிக்கறாங்கன்னு போட்டி. அண்ணா முதல்ல பார்த்துட்டா, 'இது திமிங்கலம்'-ன்னு சொல்ல, நான் பார்த்துட்டு 'இல்ல இது வவ்வால்'ன்னு அடிச்சு விடுவேன்.. ஏன்னா அது என்னப் படம் அப்படின்னு விகடன்ல எங்கேயும் க்ளூவோ விடையோ இருக்காது. அவங்கவங்க சொன்னதுத்தான் சரி-ன்னு அடுத்த விகடன் வர வரைக்கும் சொல்லிட்டு சுத்துவோம்...

முத வாரம் 3D படம் வந்ததும், அது என்ன, எப்படி பார்க்கறதுன்னு தெரியலை.. ஒரு ரெண்டு மூணு படம் பார்த்ததும், எப்படி வெச்சு பார்க்கனும்ன்னு பிடிபட்டுடிச்சி.. அதுக்கு அப்புறம் வந்த வாரங்களில, படத்தை பார்த்ததுமே என்னன்னு கண்டுபிடிக்கற அளவுக்கு எக்ஸ்பர்ட் ஆகிட்டேன்னா பாருங்களேன்..

இந்த 3D படத்தை கேள்வியே படாதவங்களுக்கும், மலரும் நினைவுகளுக்காகவும், சில 3D படத்தை கீழே தந்து இருக்கேன்.. முதல்ல ட்ரை பண்றவங்களுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், விடாமல் முயற்சி பண்ணுங்க.. கண்டிப்பா ஒரு சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ் காத்துக்கிட்டு இருக்கு. 'படம் எப்படி பார்க்கறது'ன்னு உதவிக்கு சில தொடர்புகளையும் இணைச்சு இருக்கேன் (http://www.3dphoto.net/text/viewing/technique.html, http://www.magiceye.com).

இப்போ ஜோரா எல்லோரும் கீழே இருக்கற 3D படங்களை பார்த்துட்டு, இந்த 3D படங்களில் இருக்கறது என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் (எல்லாப் படத்தையும் க்ளிக் செஞ்சு பெரியதா பார்க்கலாம்).