Monday, March 16, 2009

கல்லூரியும் கற்று மற - 1

"பூர்ணிமா, வேணா இன்னிக்கு ஈவினிங் 7 - 7:15 மணிக்குள்ள, யாருக்கும் தெரியாம தனியா உட்கார்ந்து நீ ஏதாவதொரு FM சேனல்ல ஒரு தமிழ் பாட்டுக் கேளு.. நாளைக்கு காலையில நீ என்ன FM-ல என்ன தமிழ் பாட்டுக் கேட்டேன்னு நான் சொல்றேன்."

"சரி வருண், நான் இன்னிக்கு கேட்ட பாட்டு என்னன்னு கரெக்டா நீ நாளைக்கு சொல்லிட்டா, உனக்கு மாய மந்திரம் எல்லாம் தெரியும், அப்படின்னு நான் ஒத்துக்கறேன்."

விளையாட்டாய் தான் ஆரம்பித்தது.. பூர்ணிமா எங்கள் வகுப்பின் டாப் ரேங்க் மாணவி.. "என்னப்பா, நிஜமாத்தான் சொல்றீங்களா?" என்பது பூர்ணிமாவின் டிரேட் மார்க் வசனம். நூற்றுக்கு 2 மார்க் வாங்கிவிட்டு பருத்தி வீரன்கள் நாங்கள் லந்துக்கட்ட, நூற்றுக்கு 98 மார்க் வாங்கிவிட்டு 2 மார்க் போய்விட்டதே என்று அலப்பறை பண்ணும் பார்ட்டி இவர்.

வகுப்பில் மொத்தம் இருந்த 17 மாணவர்களில், 13 பேர் கல்லூரி விடுதியில் தங்கிக் கொட்டமடித்துக் கொண்டிருந்த காலம் அது.. "பென்சில் ஜோசியம், மேஜிக்" என ஆளாளுக்கு நாங்கள் கதை அளந்துக் கொண்டிருந்தாலும், வருணின் இந்த 'மந்திரம்' சுத்தி நின்று கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கு புரிபடவேயில்லை. விடுதிக்கு திரும்பியதும், வருண் சொன்ன பிளானைக் கேட்டதும், மிகவும் உற்சாகமாகி, அவனுக்கு எல்லா உதவியும் செய்வதாக ஒப்புக்கொண்டோம்.

பிளானின் முதற்படி, அக்காலத்தில் இருந்தது மொத்தம் 4 தமிழ் FM சேனல்கள். ஆக எங்களுக்கு தேவைப்பட்டது, 4 ரேடியோக்கள் (பின்ன, 4 சேனல்களிலும் 7-7:15 என்ன பாட்டு போடறான்னு தெரியனும் இல்ல?). ஆரம்பித்தது எங்களின் ரேடியோ தேடல், விடுதியில் ஒவ்வொரு ரூமாய் சென்று கெஞ்சிக் கூத்தாடியதில் 3 தான் சிக்கின. முயற்சியில் சற்றும் மனம் தளராமல், பிளானின் அடுத்த கட்டமாய் சரியாக மாலை 7 மணிக்கு ஆரம்பித்து, 3 ரேடியோக்களில் 4 FM சேனலையும் மாற்றி மாற்றி 7:15 வரை ஒலிபரப்பான மொத்தம் 5 பாடல்களையும் ( நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, புது வெள்ளை மழை இங்கு, மதுரை மரிக்கொழுந்து வாசம், யாதும் ஊரே யாவரும் கேளீர், ஜெர்மனியின் செந்தேன் மலரே) குறித்துக் கொண்டோம்.

பிளான்படி 4 FM சேனல்-லயும் குறிப்பிட்ட டைம்ல என்னென்ன பாட்டு-ன்னு கேட்டாச்சு. ஆனா 5 பாட்டுல பூர்ணிமா என்னப் பாட்டுக் கேட்டு இருப்பாங்கன்னு கண்டுப் பிடிக்கணும். பூர்ணிமா, 'இளையராஜா விசிறியா', 'ரகுமான் விசிறியா', அவங்க டேஸ்ட் என்ன, 5 பாட்டுல இருந்து, வருண் பூர்ணிமா கேட்ட அந்த ஒரு பாட்டை எப்படி குத்துமதிப்பா சொல்லப்போறான் அப்படின்னு அன்னிக்கு நைட் புல்லா யோசிச்சுக்கிட்டே தூங்கிட்டோம்.

அடுத்த நாள் காலையில எங்களுக்கு எல்லாம் ஒரே படபடப்பா இருக்கு. வருண் மட்டும் பெருசாக ஒண்ணும் கண்டுக்கலை. "மச்சி, இப்போ இந்த 5 பாட்டையும் தனித்தனியா 'என்ன பாட்டு, படம், சேனல், பாடினவங்க-ன்னு' எழுதிக் வெச்சுக்கலாம், இல்லைன்னா மறந்துடுவோம்" அப்படின்னான். சரி ஆச்சுன்னு, அந்த பாட்டுங்களை தனித்தனி பேப்பர்-லயும் எழுதிட்டு கிளாஸுக்கு கிளம்பியாச்சு.

உள்ளே நுழைஞ்சதும் "ஏ வருண், என்ன என்னைப் பார்த்துட்டு ஓடற, சும்மா கதைத் தான விட்ட என்கிட்ட?"

"பூர்ணி, நேத்து நான் சொன்ன டைம்ல நீ தமிழ் FM-ல பாட்டுக் கேட்டியா?"

"நீ சொன்ன டைம்ல ஒரு தமிழ் பாட்டுக் கேட்டேன்பா, நீ கதை விடலைன்னா, உனக்கு நிஜமாலுமே மந்திரம் தெரியும்-னா, அது என்னப் பாட்டுன்னு சொல்லுப் பார்ப்போம்.."

இதற்க்குள் விசயம் பரவி மொத்த வகுப்பு பெண்கள் கூட்டமும் இப்போ சுத்தி நின்னுட்டாங்க. பசங்களுக்கு எல்லாம், விரல்ல இருந்து கடிச்சு துப்ப நகமே இல்லைங்கற அளவுக்கு ஒரே டென்சன். வருணுக்கும் இதே நிலைமைத்தான்..

ஆனாலும் "பூர்ணி, நேத்து நீ என்னப்பாட்டு கேட்டேன்-ன்னு இப்போ எல்லார் முன்னாடியும் சொல்லு, நான் எனக்கு மந்திரம் தெரியும்னு உனக்கு நிரூபிக்கிறேன்"

கொஞ்ச நேரம் பூரணி யோசிச்சுட்டு, "சரி வருண், நான் நேத்துக் கேட்ட பாட்டு வந்து, 'மதுரை மரிக்கொழுந்து வாசம்'ன்னு இளையராஜா பாட்டு, சூரியன் FM-ல கேட்டேன்"

உடனே நம்ம பய இதைக் கேட்டுட்டு விட்டான் பாருங்க ஒரு டயலாக்.

"எல்லோரும் நல்லா பாருங்க, பூர்ணி கேட்ட இந்தப் பாட்டை நேத்து நைட்டே என்னோட மந்திரத்துல கண்டுப்பிடிச்சு ஒரு பேப்பர்ல எழுதி வெச்சுட்டேன். இந்தாங்க, நீங்களே இதை படிச்சு பாருங்க-ன்னு" நாங்க எழுதி வெச்சிருந்த அந்த பாட்டு பேப்பரை அவனோட பேண்ட் பாக்கெட்-ல இருந்து எடுத்து கொடுத்துட்டான்.

நாங்க காலேஜ் படிச்ச 3 மூணு வருசத்திலேயும், வருணுக்கு நிஜமாவே மந்திரம் தெரியும் அப்படின்னே பூரணி பயந்துக்கிட்டு இருந்தாங்க.

பி.கு: "டேய் வருண், மொத்தம் 5 பாட்டுன்னு, 5 பேப்பர் இருந்ததேடா, எப்படி பேண்ட்ல இருந்து கரெக்டா அந்த பாட்டு பேப்பரை மட்டும் எடுத்துக் குடுத்தே.."

"மச்சி, 5 பேப்பரையும் ஒவ்வொன்னா நான் வேற வேற பாக்கெட்ல வெச்சுக்கிட்டேன். பேண்டல நாலும், சர்ட் பாக்கெட்ல ஒண்ணுன்னு"..

"ஸுப்பர்-டா, அப்புறம் ஏண்டா நீயும் அவ்வளவு டென்சனா இருந்தே?"

"மச்சி, பூர்ணி பாட்டை சொன்னதும், நாம எழுதி வெச்ச 5-ல ஒண்ணுத்தானதும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி. ஆனா எந்த பாட்டு எந்த பாக்கெட்ல வச்சேன் அப்படிங்கறதை மறந்துத் தொலைச்சுட்டேன். அதை யோசிக்கத்தான் ரொம்ப டென்சனாயிடுச்சி,.."

(நீங்க யோசிக்கறதும் ரொம்ப கரெக்ட், வருண் இப்போ மேனேஜரா நல்லா குப்பைக் கொட்டிட்டு இருக்கான்)..

3 comments:

ரமேஷ் வைத்யா said...

me the first!

Anonymous said...

appo Poornima?

Venkat said...

அவங்க பாவம், இன்னும் டெவலப்பராத்தான் இருக்கங்க :-) வருகைக்கு நன்றி..

Post a Comment