Wednesday, July 8, 2009

நாடோடிகள் - சில கேள்விகள்



1. எதையும் எதிர்பாராமல், ஒரு பழக்கத்திற்க்காக கொலையை செய்துவிட்டு வாழ்க்கையை தொலைக்கும் மூன்று நண்பர்களின் கதையே 'சுப்ரமணியப்புரம்'. எதையும் எதிர்பாராமல் ஒருக்காதலுக்காக கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு அதே வாழ்க்கையை தொலைக்கும் மூன்று நண்பர்களின் கதைத்தான் 'நாடோடிகள்'. யாருக்காக வாழ்க்கையை தொலைத்தார்களோ, அவர்களால் ஏமாற்றப்பட்டு, அவர்களையே பழி தீர்க்க முற்படும் அதே மூன்று நண்பர்கள்.. நாயகனை காதலித்து, சுற்றத்தாரால் நிர்பந்திக்கப்பட்டு நாயகனை ஏமாற்றும் நாயகின்னு சமுத்திரக்கனியும் சசியும், சுப்ரமணியப்புரத்தின் பாதிப்பில் இருந்து இன்னும் வெளியே வரலையா? படத்துல 'உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு'ன்னு நிறைய தடவை டயலாக் வெச்ச சமுத்திரக்கனி ரொம்ப நேர்மையா இது சுப்ரமணியப்புரம் பாகம்-2 ன்னு ஒத்துக்குவாரா?

2. சசியின் மேல் அவ்வளவு ஆசையாசையாயிருக்கும், சசியின் மாமன் மகளுக்கு வேறொருவருடன் திருமணம் எனும் பொழுதே நமக்கு தெளிவாக புரிந்துவிடுகிறது, இது அவருக்கு கட்டாயத் திருமணம் அப்படீங்கறது.. முதற் பாதியில், சசியோட நண்பர் வேற 'அப்பன் செத்துடுவேன்னு மிரட்டினானா, நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பே' அப்படின்னு ஒரு வசனம் வேற இருக்கு. இவ்வளவு இருந்தும், பிற்பாதியில் மாமன் மச்சான் சண்டை, அவங்கப்பா தூக்கு நாடகம், மாமன் மகள் அழுகை-ன்னு ஏகப்பட்ட இழுவையோட சொன்னது தாய்குலங்களின் அனுதாபத்திற்கோ?

3. கல்யாணம் செஞ்சுக்கிட்டு பஸ்-ல ஏறும் காதலர்களுக்கு போட்டிருக்கிற தங்கச் சங்கிலி, மோதிரம், அப்புறம் மேல, கீழ, சைடுல, அடியில-ன்னு எல்லா பாக்கெட்டுல இருந்தும் எல்லாத்தையும் எடுத்து தர சசியோட பாசம் புல்லரிக்க வைக்குது. ஒருக்கட்டத்துல, எஸ்.வி.சேகர் சொல்றாப்பல, நம்ம சசி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு போட்டிருக்கிற பனியன் ஜட்டி எல்லாத்தையும் கழட்டி பஸ்-க்குள்ள வீசிடுவாரோன்னு பயமாகிடுச்சு..ஒரு எம்.பியோட பையன்கிட்டயும் தொழிலதிபரோட பொண்ணுக்கிட்டயும் இல்லாத பணமா, இல்ல நகையா? சசி காதலருக்கு ரொம்பவே உதவுராருன்னு சொல்ல இந்த காமெடி சீன் தேவைத்தானா?



4. ஜெயம் படத்தில் சதா ஆரம்பித்து வைத்த டிரெண்ட் இது - வர வர 10-க்கு 7 படங்களில், ஹீரோயினுக்கு ஒரு பாவாடைத் தாவணி, இல்லை புடவையே காஸ்ட்யூம். இப்படத்தில் வரும் சசியின் மாமன் மகளும் 70களின் சரோஜாதேவியைப் போல படம் முழுக்க பாவாடை தாவணியிலேயே வருகிறார். சமீபத்தில், 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' அப்படின்னு ஒரு படத்த பார்த்ததும் தமிழ் சினிமாவை நினைச்சு கொஞ்சம் பயமாத்தான் இருந்துச்சு. ஒரு மொக்க ஹீரோ + பாவாடை தாவணியில் ஒரு மொக்க ஹீரோயின்னு படம் எடுத்தா எப்படியும் ஓடிடும் ஒரு நம்பிக்கையோ?

5. படம் முழுக்க இழையோடும் நகைச்சுவை வசனங்கள் (பொண்ணை நான் பார்க்கணும், எல்லா தெரியும் வெண்ணைங்களா தூங்குங்க), மாமன் மகளின் சின்ன குறும்புத்தனங்கள் (கடலையை வாயில் போட்டுக்கொண்டு மெல்லிய கண்ணடித்தல் - சூப்பர்), ஒரு சில மெல்லிய அதிர்வுகள் (அவங்களுக்கு இந்த இடம் போதும் - இடம்: மாநகராட்சி கழிவறை) என இருந்தும் இரண்டாம் பாதியில் படம் பயங்கர இழுவை. வாழ்க்கையை இழந்த நண்பர்களின் வலியை, இழப்பை இன்னும் கொஞ்சம் நாசூக்காய், சுருக்காய் சொல்லியிருக்கலாமோ?

6. "காதலர்களை சேர்த்து வையுங்கள், ஆனால் அவர்களுக்குள் உண்மையான காதல் இருக்கின்றதா எனப் பார்த்துவிட்டு சேர்த்து வையுங்க" அப்படீங்கறதுதான் படத்தோட மெசேஜ். ஆனால் கடைசிக்காட்சியில் யாரோ ஒருத்தர், காதலர்களை சேர்த்து வைக்க ஆளுங்களை தேத்த, முன்ன பின்ன தெரியாத அந்தக் காதலர்களுக்காக, சசியும் அவரோட தோஸ்த்துக்களும் 'நாங்களும் வரோம்' அப்படீன்னு கிளம்பறது, சமுத்திரக்கனி ஸார், என்னத்தான் சொல்ல வர்றீங்க இந்தப்படத்தில?